Archives: அக்டோபர் 2016

அது ஒருக்காலும் தீர்ந்து போவதில்லை

பணியிலிருந்து ஓய்வு பெற இருந்த எனது சிநேகிதியிடம், ஓய்வுபெற்ற பின் அவளது வாழ்க்கையில், அவள் பயப்படும் காரியம் என்ன என்று நான் கேட்டபொழுது, “நான் ஓய்வு பெற்றபின், கையில் பணம் தீர்ந்து போகாமல் இருக்கவேண்டும் என்பது குறித்து கவனமாக இருப்பேன்” என்று கூறினாள். அடுத்த நாள் நான் எனது நிதி ஆலோசகரிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது, பணம் தீர்ந்து போகாமல் தடுப்பது எப்படி என்பது குறித்து எனக்கு ஆலோசனை கொடுத்தார். நமது எதிர்கால வாழ்க்கைக்கு போதுமான நிதி இருக்க வேண்டும் என்ற பாதுகாப்பான சூழ்நிலையைப் பற்றி அறிந்துகொள்ள நாம் அனைவருமே விரும்புகிறோம்.

பாதுகாப்பான உலக வாழ்க்கைக்காக எந்தவிதப் பொருளாதாரத் திட்டமும் உறுதி அளிக்காது. ஆனால், இந்த உலக வாழ்க்கைக்கும் இதற்கு பின்னால் உள்ள வாழ்க்கைக்கும் நித்திய நித்தியமாய் நமக்கு உறுதி அளிக்கும் திட்டம் ஒன்று உள்ளது. “அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்” (1 பேதுரு 1:4) என்று அப்போஸ்தலர் பேதுரு அதை விளக்குகிறார்.

நம்முடைய பாவங்களை மன்னிக்க இயேசுவின் மேல் விசுவாசம் வைக்கும்பொழுது, தேவனுடைய வல்லமையினால் நித்திய சுதந்திரம் நமக்குக் கிடைக்கிறது. அந்த சுதந்திரத்தினால் நாம் நித்திய காலமாய் வாழ்வோம். நமது தேவைகள் சந்திக்கப்படாத நிலைமை நமக்கு ஒருக்காலும் ஏற்படாது.

ஓய்வு பெறுவதற்கான திட்டத்தை நம்மால் தீட்டுவதற்கு முடிந்தால், அது நல்லது தான். ஆனால், ஒருக்காலும் தீர்ந்து போகாத நித்திய சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வது அதைவிட மிக முக்கியமானதாகும். அது இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தினால் மட்டுமே நமக்கு கிடைக்கும்.

செவிகொடுக்கும் தேவன்

ஜலதோஷத்தாலும், ஒவ்வாமையினாலும் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு சத்தங்கள் எதையும் தெளிவாகக் கேட்க முடியாமல், நீருக்குள் மூழ்கி இருந்ததுபோல உணர்ந்தேன். அநேக வாரங்களுக்கு சத்தத்தை தெளிவாக கேட்க இயலாமல் கஷ்டப்பட்டேன். அவ்வாறு நான் கஷ்டப்பட்ட பொழுதுதான் சாதாரண நாட்களில் தெளிவாகக் கேட்ககூடிய தன்மையை ஒரு பொருட்டாக எண்ணாமல் இருந்ததை உணர்ந்தேன்.

சிறுவனான சாமுவேல் ஆலயத்தில் தூங்கிக்கொண்டிருந்தபொழுது, அவனது பெயரைச் சொல்லி கூப்பிட்ட சத்தம் கேட்டபொழுது, அரைகுறை தூக்கத்திலிருந்து எழுந்தான் (1 சாமு. 3:4). மூன்று முறை அவன் பிரதான ஆசாரியனாகிய ஏலிக்கு முன்பாக வந்து நின்றான். மூன்றாவது முறைதான், தேவன் சாமுவேலைக் கூப்பிடுகிறார் என்பதை ஏலி உணர்ந்தான். அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாக இருந்தது (வச. 1). இஸ்ரவேல் மக்கள் தேவனுடைய வார்த்தைகளைக் கேட்கும் பழக்கமில்லாதிருந்தார்கள். ஆனால், தேவனுடைய சத்தத்திற்கு எவ்வாறு மாறுத்தரம் கூறவேண்டுமென்று ஏலி சாமுவேலுக்குப் போதித்தான் (வச. 9).

சாமுவேலின் காலத்தில் இருந்ததை விட இந்தக் காலங்களில் தேவன் அதிகமாக பேசுகிறார். “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்” (எபி. 1:1–2) என்று எபிரெயருக்கு எழுதின நிரூபம் கூறுகிறது. அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் கிறிஸ்து நமக்கு கற்பித்தவைகளில் வாழ, நம்மை வழிநடத்துகிற, பரிசுத்தாவியானவர் பெந்தெகொஸ்தே நாளன்று அருளப்பட்டதைப்பற்றி வாசிக்கின்றோம். ஆனால் அவருடைய சத்தத்தைக் கேட்கவும், அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். என்னுடைய ஜலதோஷத்தின் பொழுது நான் தண்ணீருக்கு அடியில் உள்ளவளைப் போல, எதையும் தெளிவாக கேட்க முடியாமல் இருந்தேனோ, அது போலவே நாம் இருக்கிறோம். கர்த்தருடைய வழிநடத்துதல் இதுதான் என்று நாம் எண்ணும் காரியங்களை வேதாகமத்தின் உதவியின் மூலமாகவும், மூத்த விசுவாசிகளின் மூலமாகவும் சோதித்து அறிந்து கொள்ள வேண்டும். தேவனுக்கு பிரியமான பிள்ளைகளாக இருப்பதால் நாம் அவருடைய சத்தத்தைக் கேட்கிறோம். நமக்கு ஜீவனை கொடுப்பதைப்பற்றி நம்மோடு கூடப்பேச தேவன் அதிகம் விரும்புகிறார்.

ஜெபிக்கும் நோயாளி

நான் வாழ்ந்து வந்த நகரில் வசித்து வந்த ஆலன் நானிங்கா என்ற நபர் இறந்தபொழுது, அவரைப்பற்றி வெளியான இரங்கல் செய்தி மூலம், எனது ஊரில் வாழ்ந்து வந்த அனைத்துக் கிறிஸ்தவர்களைவிட அவர் “மிகவும் அர்ப்பணிப்புடன் கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழ்ந்தவர்” என்ற செய்தி எல்லாராலும் அறியப்பட்டது. அந்த இரங்கல் செய்தியில் அவரது குடும்பம், அவர் செய்து வந்த வேலை ஆகியவற்றைப் பற்றிக் கூறினபின், அவருடைய உடல்நிலை 10 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டிருந்ததையும் விளக்கினது. அவர் மருத்துவமனையில் இருந்தபொழுது, அங்கிருந்த உள்நோயாளிகள் மத்தியில் அர்ப்பணிப்புடன் செய்து வந்த ஜெப ஊழியத்தின் நிமித்தமாக “ஜெபிக்கும் நோயாளி” என்ற சிறப்புப் பட்டத்தை பெற்றார் என்ற விளக்கத்துடன் அந்த இரங்கல் செய்தி முடிவடைந்திருந்தது. அவரது நோயின் வேதனைகள் மத்தியிலும் அவரைச் சுற்றியிருந்த தேவையுள்ள மக்களுக்காக ஜெபித்து வந்த ஒரு மனிதனை இங்கு பார்க்கிறோம்.

இயேசுவை, யூதாஸ் காட்டிக்கொடுப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக “நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்” (யோவா. 17:11) என்று இயேசு அவருடைய சீஷர்களுக்காக ஜெபித்தார். அவருக்கு நேரிடப்போவதை அவர் நன்கு அறிந்திருந்தும், அவர் தன்னைக் குறித்து சிந்திக்காமல், அவரைப் பின்பற்றின சீஷர்களைப்பற்றி அவரது கவனத்தை செலுத்தினார்.

நமது சுகவீனம், துன்பமான நேரங்கள் மத்தியில் பிறருடைய ஜெப உதவிக்காக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். அந்த ஜெபங்கள் நம்மை ஊக்கப்படுத்த நமக்கு மிகவும் உதவியாக உள்ளன. ஆனால், நாமும் நம்முடைய கர்த்தரைப்போல நம்மைச் சுற்றியுள்ள, உதவி தேவைப்படும் மக்களுக்காக, தேவனை நோக்கி நமது கண்களை ஏறெடுத்து ஜெபிப்போமாக.

எண்ணுவதற்கு கற்றுக்கொள்ளுதல்

எனது மகன், 1 முதல் 10 வரை எண்ணுவதற்கு கற்றுக்கொண்டிருக்கிறான். அவனது பொம்மைகள், அவன் பார்க்கும் மரங்கள் அனைத்தையும் எண்ணுவான். அவனது பள்ளிக்குச் செல்லும் வழியில் எனது கவனத்திற்கு உட்படாத காட்டுப்பூக்கள் அல்லது எனது பாதத்திலுள்ள விரல்கள் ஆகியவற்றைக் கூட அவன் எண்ணுவான்.

இப்படியாக என் மகன் எண்ணுவதின் மூலம், நான் மறுபடியும் எண்ணுவதற்கு எனக்குப் போதிக்கிறான். நான் செய்து முடிக்காத காரியங்கள் அல்லது என்னிடம் இல்லாத பொருட்களைப் பற்றிய காரியங்களில் என் முழு கவனத்தையும் செலுத்துவதால், என்னைச் சுற்றியுள்ள அனைத்து நன்மையான காரியங்களையும் கவனிக்கத் தவறிவிடுகிறேன். இந்த ஆண்டில் எனக்குக் கிடைத்த புதிய சிநேகிதர்கள், பதில் கிடைத்த ஜெபங்கள், எனது நல்ல சிநேகிதருடன் நான் சிரித்து மகிழ்ந்த நேரங்கள் அனைத்தையும் மறந்து விட்டேன்.

ஒவ்வொரு நாளும் தேவன் அருளும் ஆசீர்வாதங்களை எண்ணுவதற்கு எனது பத்து விரல்கள் போதாது. “என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லிமுடியாது. நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்” (சங். 40:5). இரட்சிப்பு, ஒப்புரவாதல், நித்திய ஜீவன் போன்ற ஆசீர்வாதங்களை நம்மால் எப்படி எண்ணுவதற்கு இயலும்?

நம்மீது தேவன் கொண்டுள்ள விலைமதிப்பற்ற எண்ணங்கள், அவர் நமக்குச் செய்த ஆசீர்வாதமான காரியங்கள் ஒவ்வொன்றாக எண்ணி நாமும் தாவீதோடு சேர்ந்து, “தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம். அவைகளை நான் எண்ணப்போனால், மணலைப்பார்க்கிலும் அதிகமாம்; நான் விழிக்கும்போது இன்னும் உம்மண்டையில் இருக்கிறேன்” (சங். 139:17–18) என்று தேவனை போற்றித் துதிப்போம்.

எண்ணுவதற்கு மறுபடியும் கற்றுக்கொள்வோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

அன்புக்காக தாகம்

சிறுவயதில் கோடை விடுமுறையில் வேலூரில் உள்ள கோடைக்கால வேதாகம பள்ளிக்கு (விபிஎஸ்) சென்று வந்தேன். வெப்பநிலை சுமார் 45 டிகிரி சென்டிகிரேட் ஆக இருக்கும். வானத்தில் மேகமோ, மரங்களில் இலையோ, தென்றல் வீசும் அறிகுறியோ இருக்காது. கொதிக்கும் வெயிலுக்கு இதமாக எங்களுக்கு இருந்த ஒரே நிவாரணம், எங்கள் புட்டிகளில் உள்ள தண்ணீரும் தன்னார்வலர்கள் வாளிகளில் கொண்டு வந்த பழச்சாறுகள் மட்டுமே. பழச்சாறு நிறைந்த ஒரு குவளை படியளப்பிற்கு நாங்கள் எங்கள் கோப்பைகளுடன் வரிசையில் நிற்போம். எவ்வளவு மெதுவாகக் குடிப்போம்! ஆயினும்கூட, எங்கள் கோப்பைகள் வறண்டு போகும், மேலும் நாங்கள் அதிகம் பெறத் தவிப்போம், அரிதாகவே இரண்டாவது முறையும் கிடைக்கும்.

வறண்டு போகத் தக்கதான கோடையில் திரவங்களுக்கான நமது தாகத்தைப் போலவே, பாழான அன்பற்ற உலகில் நாம் அனைவரும் அன்பிற்காகத் தாகம் கொள்கிறோம். நாம் பல்வேறு இடங்களில் அன்பைத் தேடுகிறோம், மேலும் அது பெரும்பாலும் அளந்து போடும்படிக்கு வறண்டு கிடக்கிறது அல்லது நிபந்தனைக்குட்பட்டு விலைகொடுத்து வாங்க வேண்டும் என்பதாகக் காண்கிறோம். ஆனால் ஒருபோதும் வறண்டு போகாத "ஜீவத்தண்ணீரின்" மூல ஆதாரம் இருப்பதாக வேதாகம நமக்குக் கற்பிக்கிறது (யோவான் 4:13-14). ஜீவத் தண்ணீர் பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது (யோவான் 7:39). அப்போஸ்தலனாகிய பவுல் பரிசுத்த ஆவியின் மூலம் "தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிற(தாக)" (ரோமர் 5:5) நமக்குக் கூறுகிறார். இது அளந்து போடப்படுவதல்ல அல்லது நமது தகுதிக்கு தக்கதாகவும் அல்ல. மாறாக, அது எல்லையற்றது மற்றும் அளவிட முடியாதது.

நாம் அவருக்கு விரோதமாக முரட்டாட்டம் செய்தபோதும், தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை நமக்காக மரிக்க அனுப்பியதன் மூலம் நம்மீதான தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார் (வ.8). இயேசுவின் பலியின் காரணமாக, அவரிடமிருந்து பிரிந்திருந்த தனிமையிலிருந்து நாம் இரட்சிக்கப்படுகிறோம், தேவனுடன் நாம் ஒப்புரவாக்கப்படுகிறோம். அவர் அவருடைய அன்பை நமக்குள் ஊற்ற, அது அன்பின் ஊற்றாக மாறும் (வ.10) . நீங்கள் அன்பிற்காகத் தாகமாக இருந்தால், தேவனிடம் செல்லுங்கள். அவரே அன்பு.

தேவன் மட்டுமே திருப்தியாக்குவார்

பெரிய இறால், ஷவர்மா, சாலடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல உணவு வகைகள் அந்த வீட்டு உரிமையாளரிடம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் விருந்து வைக்கவில்லை. உண்மையில், அவர் அந்த வகையறாவான உணவை வாங்கவுமில்லை; அவரது ஆறு வயது மகன் செய்தான். இது எப்படி நடந்தது? தந்தை தூங்குவதற்கு முன் தனது மகனை தனது அலைபேசியில் விளையாட அனுமதித்தார், அவனோ பல உணவகங்களில் இருந்து விலையுயர்ந்த உணவுகளை தாராளமாக வாங்க அதைப் பயன்படுத்தினான். “ஏன் இப்படி செய்தாய்?” என தந்தை, போா்வைக்குப் பின் மறைந்திருந்த மகனிடம் கேட்டார். ஆறு வயது சிறுவன், “எனக்கு பசித்தது” என்றான். சிறுவனின் பசியும், முதிர்ச்சியின்மையும் அதிக விலைக்கிரயம் செலுத்த வழிவகுத்தது.

ஏசாவின் பசியும் அவருக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்களை விட அதிக நஷ்டத்தை அளித்தது. ஆதியாகமம் 25ல் உள்ள கதை, அவர் சோர்வடைந்து உணவுக்காக ஏங்குவதை காட்டுகிறது. அவர் தன் சகோதரனிடம், “அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன்” (வ.30) என்றான். அதற்கு யாக்கோபு ஏசாவின் சேஷ்ட புத்திரபாகத்தை கேட்டார் (வ.31). அந்த பிறப்புரிமையில், முதற்பேறான ஏசாவின் அதிகாரம், தேவனின் வாக்குதத்தங்களின் ஆசீர்வாதம், சொத்தில் இருமடங்கு பங்கு மற்றும் குடும்பத்தின் ஆவிக்குரிய தலைவராக இருக்கும் பாக்கியம் ஆகியவை அடங்கும். தன் பசிக்கு தானே பலியான ஏசா, “புசித்துக் குடித்து” மற்றும் “தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான்” (வ. 34).

நாம் சோதிக்கப்பட்டு, எதையாவது விரும்பும்போது நமது பசி நம்மைக் கொடிய தவறுகளுக்கும் பாவங்களுக்கும் இட்டுச் செல்ல விடாமல், பசியுள்ள ஆத்துமாவை “நன்மைகளால்” (சங்கீதம் 107:9) திருப்திப்படுத்துகிற பரலோகத் தகப்பனை மட்டும் அணுகுவோம்.

நெருக்கத்தின் குரல்

நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த இடிபாடுகளின் இரண்டு தளங்களுக்கு அடியில் சிக்கியிருந்த சிரியா நாட்டுச் சிறுமியான ஐந்து வயது ஜினான், தனது சிறிய சகோதரனைச் சுற்றியுள்ள இடிபாடுகளில் இருந்து காப்பாற்றியபோது மீட்புப் பணியாளர்களை அழைத்தார். “என்னை இங்கிருந்து வெளியே கூட்டிச்செல்லுங்கள்; நான் உங்களுக்காக எதையும் செய்வேன், நான் உங்கள் வேலைக்காரியாகவும் இருப்பேன்” என்று அவள் நொறுங்கிய உள்ளத்தோடு அழைத்தாள்.

நெருக்கத்திலிருந்து அழைப்பது என்பது சங்கீதம் முழுதும் உள்ளது, “நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்” (118:5). பூகம்பத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் எடையை நாம் அனுபவிக்கவில்லை என்றாலும், சவாலான உடல்நிலை, பொருளாதாரக் கஷ்டம், எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற தன்மை அல்லது உறவுமுறை இழப்பு போன்றவற்றின் நெருக்குதலை நாம் அனைவரும் அனுபவிக்கிறோம்.

அந்த தருணங்களில் நாம் விடுதலைக்காக தேவனிடம் பேரம் பேசலாம். ஆனால் உதவிக்காக தேவனை வற்புறுத்த வேண்டியதில்லை. அவர் பதிலளிப்பதாக உறுதியளிக்கிறார், அது நமது சூழ்நிலையிலிருந்து விடுவிக்கவில்லை என்றாலும், அவர் நம்முடனும் நம் அருகிலும் இருப்பார். மரணம் உட்பட வேறு எந்த ஆபத்துக்கும் நாம் பயப்படத் தேவையில்லை. சங்கீதக்காரனோடு நாமும், “எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்” (வ.7) எனலாம்.

ஜினானும் அவளது தம்பியும் பெற்றுக்கொண்டதை போல வியத்தகு மீட்பு நமக்கு வாக்களிக்கப்படவில்லை, ஆனால் சங்கீதக்காரனை “விசாலத்திலே” (வ. 5) கொண்டு வந்த நமது உண்மையுள்ள தேவனை நாம் நம்பலாம். அவர் நம் நிலைமையை அறிந்திருக்கிறார், மரணத்திலும் அவர் நம்மை கைவிடமாட்டார்.